போலியோவினால் கால்கள் செயலிழந்த போதும் சுயமாக சைக்கிள் திருத்தும் தொழில் புரியும் இளைஞர்
(சிலாபம் திண்ணனூரான்)
சேற்றுக் குளத்துக்குள் செந்தாமரையும் சிப்பியின் உள்ளே முத்தும் பிறப்பதும் போன்று மாற்றுத்திறனாளிகளும் இவ் உல கில் பல சாதனைகளைப் படைத்துவருகின்ற னர். பல மாற்றுத்திறனாளிகள் சோதனையை வேதனையை சவாலாக ஏற்று பல சாதனைபுரிந்துள்ளனர். இதற்காக இவர்கள் ஏற்றுக்கொண்ட வலிகள் விலை மதிப்பற்றவை.
இன்பம் துன்பம் இரண்டையும் தூக்கி எறிந்து விட்டு ஊக்கம் தளராமல் உழைப்பினையே எப்போதும் கண்ணும் கருத்துமாய் இருக்கும் ஒரு மாற்றுத்திறனாளிதான் கொழும்பு பெர்குசன் வீதி வெலிகொடவத்தையில் வசிக்கும் எம்.ரி.ரிஸ்வான்.
விதியால் என்னை எதுவுமே செய்ய முடியாது. அந்த விதியையும் என்னால் வெல்ல இயலும் என்று கூறுகின்றார். எமது இக்கதையின் கதாநாயகன் எம். ரிஸ்வான்.
இவர் தனது இரு கால்களும் போலியோ நோயினால் முடமாகிய நிலையில் சுயமரியாதையுடன் சொந்தமாக சைக்கிள் திருத்தம் நிலையத்தை நடத்தி வருகிறார். எழுந்து நிற்க இயலாத நிலையில் தவழ்ந்து தவழ்ந்து சிறு குழந்தையாக காணப்படும் ரிஸ்வான், தனது சுயதொழில் மூலம் கிடைக்கும் வருமானம் தானும் தன்னைப் பெற்ற தாயும் வாழ்க்கை நடத்த போதுமானதாக உள்ளதென்ற தகவலையும் வழங்கினார்.
ஊன்று கோல் உதவியோடும் நடைபயில இயலாத நிலையில் விடா முயற்சியோடு பலதரப்பட்ட சைக்கிள் வகைகளோடு தினமும் மல்லுக் கட்டுகிறார் ரிஸ்வான். இவரின் விடா முயற்சியே இவரை ஒரு திருப்பு முனை வாழ்க்கைக்கு அழைத்துச் செல்கின்றது.
ஏனையவர்களைப் போன்று தனது இயலாமையை காட்டி வீதியில் நின்று கையேந்தாமல் தனது சுய முயற்சியில் வெற்றி நடைபோடுகிறார். இவருக்கென ஒரு சிறந்த வாடிக்கையாளர் வலையமைப்பைக் கொண்ட பின்னணியையும் முடக்கி வைத்திருப்பது இவரின் தொழில் இரகசியமாகும்.
இவ்வாறு தனது சுய தொழில் மூலமாக பெரும் எண்ணிக்கையைக் கொண்ட ஒரு வாடிக்கையாளர் வலையமைப்பைக் ஏற்படுத்திக் கொள்ள முக்கிய காரணமாக விளங்குவது இவரிடம் இருக்கும் நேர்மையேயாகும்.
தனது வாடிக்கையாளரின் சைக்கிளைத் திருத்தியப் பின் இவர் கேட்கும் தொகையை விட அதிகமாக வழங்கினால் அப்பணத்தை பெற்றுக் கொள்ள ரிஸ்வான் மறுப்புத் தெரிவிப்பார். இது இவரின் வெற்றிக்கும் தனது தொழிலுக்கும் வழங்கும் மரியாதையும் கண்ணியமுமாகும்.
ரிஸ்வானுக்கு அவரது வாழ்க்கையில் எதிர் நோக்கும் சவால்களை நம்பிக்கையோடும் மன உறுதியோடும் வெற்றிக்கொள்ளும் வல்லமையை எல்லாம்வல்ல இறைவன் இவருக்கு பெரும் கொடையாக வழங்கியுள்ளார்.
இன்று முப்பது வயதை தொட்டுவிட்ட இளைஞரான எமது கதாநாயகன் ரிஸ்வான் இன்றைய காலத்து இளைஞர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறார். மாற்றுத்திறனாளியான ரிஸ்வான், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வறுமையோடும். போராடுகிறார் என்பது எம் அனைவரையும் வியக்கவைக்கும் செய்தியாகும்.
தனது இரண்டு கால்களும் செயலிழந்த நிலையில் சைக்கிள்களை திருத்துவதில் கை தேர்ந்தவர் ரிஸ்வான். தன் முழு உழைப்பின் இன்பம் காண்பவர் இவர். ரிஸ்வானைப் போன்று உழைப்பின் கூடிய கவனம் மேற் கொள்வோரே வாழ்க்கையிலும் முன்னேறுபவர்கள் என வர்த்தக சமூகம் தெரிவிக்கும் பிரதான தகவலுமாகும். இந்த உழைப்பு தான் இவரின் உடலுக்கும் உள்ளத்துக்கும் உறுதியை வழங்கும் ஊட்டச் சத்தாகும்.
அதே உழைப்புதான் ரிஸ்வானை முன்னேறு என நச்சரிக்கிறது. அந்த நச்சரிப்பானது அவரை நல்லவராக ஆக்குவதற்காகத்தானே தவிர நலியச் செய்வதற்காக அல்ல. இதன் காரணமாகவே ரிஸ்வானின் மீது எவரும் பலவீனமானவராக தங்களின் பார்வையைச் செலுத்துவதில்லை.
சகல உடன் வளங்களையும் கொண்ட பலசாலியாகவே மக்களின் பார்வை இவரின் மீது விழுகின்றது. இவரால் நிமிர்ந்து நிற்க இயலாது. நடக்கமுடியாது சப்பாணியாகவே வாழ்கிறார்.
கொழும்பு 15 பேர்குசன் வீதியில் களனி நதிக்கரையோரத்தில் களனி நதி ரஜ மஹாவிகாரைக்கு அருகிலேயே அவரின் சைக்கிள் திருத்தும் நிலையம் உள்ளது. இரண்டு சகோதரிகள் மூன்று சகோதரர்களுடன் பிறந்த இவரை இவரின் ஒரு வயதில் போலியோ நோய் தாக்கியுள்ளது.
தனது 11 வயதில் தந்தையை இழந்துள்ளார். தகப்பனின் மறைவை அடுத்து வறுமை சொல்லாமல் கொள்ளாமல் இவரின் குடும்பத்துக்குள் நுழைந்துவிட்டது. ரிஸ்வா னின் கால்களும் செயலிழந்தமையால் தாய் இவரை பாடசாலையில் கல்விகற்க இணைக்கவில்லையாம்.
இதற்கான முக்கிய காரணம் தனது மகன் பாடசாலையின் சேர்ந்தான் பாடசாலையின் முழு கல்வி சமூகமும் ரிஸ்வானை கேலி பண்ணுவார்கள் என்ற எண்ணமாகும். இந்த தகவலை ரிஸ்வான் தெரிவிக்கையில் அவருக்குள் ஒரு வித கவலை அதிரடியாக தோன்றியதை அவரின் முகம் அடையாளப்படுத்தியது. அப்போத அந்த முகத்தை சோகம் ஈரமாக்கியது.
ஆயிரந்தான் இருந்தாலும் அன்னையின் அன்பே உலகில் மிகச் சிறந்த அன்பு. அந்த அன்பு இயற்கையானது. செயற்கையெல்லாம் ஒரு நாள் சிதறக்கூடியது. தாயின் அன்பு ஒரு சொர்க்கம் என்பதற்கு உதாரணம் தான் ரிஸ்வானின் தாய்.
தாய் மொழியில் எழுத வாசிக்கத் தெரியாத ரிஸ்வானுக்கு ஆங்கிலத்தில் தனது பெயரை கையெழுத்தாக பதிவு செய்ய மட்டுமே தெரியுமாம். அதுவும் தனது நண்பர் ஒருவர் மூலமே கையெழுத்திடும் முறைமையை ஆங்கிலத்தில் பயின்றுள்ளார்.
இவரின் தகப்பனின் மறைவின் பின்னர் வீட்டோடு முடங்கிக் கொள்ளாது தனது 11 வயதில் மட்டக்குளியில் தேயிலை ஏற்றுமதி கம்பனி ஒன்றில் தொழிலாளியாக இணைந்துள்ளார்.
சிறுவர் தொழிலாளியாக இணைந்த இவருக்கு இத்தொழிற்சாலையில் தேயிலை பொதியிடும் தொழில் வழங்கப்பட்டுள்ளது 1994 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை இங்கு தொழில் புரிந்துள்ளார்
1997 ஆம் ஆண்டு அக்கம்பனியிலிருந்து விலகி சுய தொழிலில் ஈடுப்பட எண்ணினார். ஆனால் சுய தொழிலுக்கான வாய்ப்பு இல்லாது இருந்தது. இதற்கான காரணம் மனதில் உறுதி இருந்தும் இவரிடம் பணம் இல்லை மட்டக்குளியில் உள்ள தனது நண்பர் அப்துல் ஹம்திடம் ரிஸ்வான் தனது கனவை கூறியுள்ளார்.
அவரோ, இவரை ஊக்கப்படுத்தி 300 ரூபா பணம் வழங்கியுள்ளார். அப்பணமே இவரின் முழுவாழ்க்கையையும் புரட்டிப்போட்டது.
நேரத்தை வீணாக்குகிறவர்கள் வீணர்கள். இவர்களே வாழ்க்கையை வீணாக்குகிறார் கள். இவர்களால் என்றுமே வாழ்க்கையில் முன்னுக்கு வர இயலாது. இவர்களுக்கு நேரத்தையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தெரியாது. இவர்கள் வீதியில் கிடக்கும் குப்பைக் காதிதங்களைப் போன்றவர்கள்.
இவ்வாறான இளைஞர்களே இன்று போதைவஸ்த்து பாவனைக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில்தான் எமது கதாநாயகன் 300 ரூபாய் பணத்தில் ரிஸ்வான் கற்பூர உருண்டைகளை கொள் முதல் செய்தார். கொள்முதல் செய்த கற்பூர உருண்டைகளை ஆறு உருண்டைகள் கொண்ட பக்கெற்றுக்களாக தயாரித்தார்.
தான் தயாரித்த கற்பூர உருண்டை பக்கெற்றுக்களை சந்தைப்படுத்த மக்கள் அதிகமாக நடமாடும் கொழும்பு மெயின் வீதி டைட்டஸ் கட்டிட நடைப்பாதையை பயன்படுத்தினார்.
இவரின் சுய தொழில் வெற்றிப் பயணத்திற்கு இறைவனின் ஆசிர்வாதமும் கிடைத்தது. தினமும் 250 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை சம்பாதிக்கத் தொடங்கினார்.
சிறிது காலத்தில் நடை பாதை வியாபாரம் தடை செய்யப்பட்டதால் ரிஸ்வான் பெரும் பாதிப்புக்கு தள்ளப்பட்டார்.
இதேவேளை ரிஸ்வான் தனது பழுதான சக்கர நாற்காலியை தானே திருத்திக் கொள்வார். சைக்கிள் திருத்தும் தொழிலை ஆரம்பித்தால் எம்மால் முடியுமே என்ற கனவு அவரது மனதில் தோன்றியது.
இதை மனதில் நிறுத்திக் கொண்டு தனது சகோதரரின் சைக்கிள் திருத்தும் நிலையத்தில் இணைந்து அதன் தொழில் நுட்பங்களை தெரிந்துக் கொண்டார்.
பல வருடங்கள் தான் பெற்ற அனுபவத்தைக் கொண்டு 2013 ஆம் ஆண்டு மே மாதம் பெர்குசன் வீதியில் சைக்கிள் திருத்தும் நிலையத்தை ஆரம்பித்தார். இன்று 300 ரூபாய் முதல் 400ரூபாய் வரை தினமும் உழைப்பதாக இவர் தெரிவித்தார்.
“எனது இத்தொழிலை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும். மேலும் மூவருக்காவது தொழில் வழங்க வேண்டும். எனது உழைப்பில் எனக்கு நிறையவே நம்பிக்கை உண்டு” என்கிறார் ரிஸ்வான்.
நாம் இறந்ததன் பின்னர் வேறு ஒருவரின் குழியிலேயே எம்மை அடக்கம் செய்வர். இது விதியா? அல்லது சதியா? என்பது இறைவனுக்குத்தான் தெரியும். ஆனால் இன்று எமது ரிஸ்வான், இறந்த ஒரு மாற்றுத்திறனாளி பாவித்த சக்கர நாற்காலியையே பாவிக்கின்றார்.
அதுவும் பாவனைக்குதவாத நிலை சக்கர நாட்காலியாகும். வறுமைக் கோட்டில் வாழும் ரிஸ்வானுக்கு சக்கர நாற்காலி ஒன்று அவசியத்தேவையாக உள்ளது.
மனித நேயம் கொண்டவர்கள் இவருக்கு உதவ முன் வருமாறு தெரிவிக்கறார். நல்லதோர் சக்கர நாற்காலி கிடைத்தால் தன்னால் மேலும் உழைக்கமுடியும் எனவும் தெரிவிக்கின்றார்.
உண்மையிலேயே என்றாவது ஒரு நாள் வாழ்நாளில் ஒரு தடவையாவது நம்மை விட கீழே உள்ளவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போது எம்மையே அறியாது எமது மனம் குறுகுறுக்கும் என்ற உண்மையையும் அவர் தெரிவித்தார்.
உண்மை நேர்மை பலனை எதிர் பார்க்காமல் கடமையைச் சரியாகச் செய்தல் பிறருக்கு துன்பம் அளிக்காமலிருத்தல் ஆகிய நான்கு குணங்களும் ரிஸ்வானுடன் வாழ்கின்றது.