Thursday, 26 December 2013

7500 வருடங்களுக்கு முந்தைய சுனாமியின் தடயங்கள் கொண்ட குகை : 2004 ஆம் ஆண்டு சுனாமி உருவான இடத்தில் கண்டுபிடிப்பு
2013-12-26 12:24:49
7,500 வருடங்களுக்கு முன்னர் தாக்கிய சுனாமியின் தடயங்கள் கொண்ட குகையொன்றை இந்தோனேஷியாவில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


2004 ஆம் ஆண்டு டிசெம்பர் 26 ஆம் திகதி     இலங்கை, இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து முதலான நாடுகளில் சுமார் 230,000 பேர் பலியாகுவதற்கு காரணமான பாரிய பூகம்பம் ஏற்பட்ட பகுதிலேயே இந்த குகையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுண்ணாம்புக் கற்களாலான இந்த குகை சுமத்ரா தீவின் பண்டா ஆச்சே கரையோரத்திலிருந்து சில மீற்றர் தூரத்தில் உள்ளது. சுமார் ஒரு மீற்றர் உயரமான இந்த குகை ஆயிரக்கணக்கான வருடங்களாக  பாரிய அலைகளுக்கும் காற்றுக்கும்  தாக்குப்பிடித்துள்ளது.

அடுக்கடுக்கான மணல்படிவுகள் கொண்ட இந்த குகையை 2011 ஆம் ஆண்டு ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அங்கு கிடைத்த பொருட்களை பரிசோதனைக்குட்படுத்தியதன் மூலம் 2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய சுனாமிகள் குறித்த  ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்டுகிறது.
சிங்கப்பூரிலுள்ள புவி அவதான நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரையான ஆய்வுகளின்படி அப்பகுதியில் பாரிய சுனாமிகள் குறித்த கால இடைவெளியில் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

2004 ஆம் ஆண்டின் சுனாமிக்கு முன் இறுதியாக 2880 வருடங்களுக்கு அது போன்ற பாரிய சுனாமி ஏற்பட்டதாம். ஆனால் அதற்கு முந்தைய 500 வருடகாலத்தில் 4 பாரிய சுனாமிகள் ஏற்பட்டதாக மேற்படி அவதான நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளரான சார்ள்ஸ் ரூபின் தெரிவித்துள்ளார்.



சில சுனாமிகளுக்கான தடயங்கள் அழிந்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அப்பகுதியில் 1393, 1450 ஆம் ஆண்டுகளில் பாரிய பூகம்பங்கள் ஏற்பட்டதை விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர்.

இந்தோனேஷியத் தீவுக்கூட்டமானது புவித் தட்டுகள் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. இத்தகைய புவித்தட்டுக்களின் அசைவினாலேயே பூகம்பம் ஏற்படுகிறது. சமுத்திரத்தின் கீழ்  பாரிய பூகம்பங்கள் ஏற்படும்பேர்து சுனாமி ஏற்படுகின்றன.

இந்தோனேஷிய பிராந்தியத்தின் கடந்த காலத்தை பற்றி அறிந்துகொள்வதற்காக 2004 ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் அப்பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment